24 Feb 2012

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய்...


கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய்...

 
கர்ப்பகாலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. அதனால் கர்ப்பிணிகள் பரிசோதித்து, கண்டறிந்து, முறையான சிகிச்சை பெற வேண்டும். அதுதான் தாய்க்கும், குறிப்பாக குழந்தைக்கும் நல்லது. "கர்ப்பகால சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, முதலில் `குளுகோஸ் சேலஞ்ச் டெஸ்ட்' (ஜி.சி.டி) எடுக்கவேண்டும். ஐம்பது கிராம் குளுகோஸ் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கணக்கிட வேண்டும்.
 
அதில் 140 மில்லி கிராம் என்ற அளவிற்கும் அதிகமாக இருந்தால் `டயோக்னஸ்டிக் டெஸ்ட்' எனப்படும் `குளுகோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்' (ஜி.டி.டி) செய்து பார்க்க வேண்டும். இந்த பரிசோதனையை வெறும் வயிற்றில் மேற்கொள்ள வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவினை கணக்கிட்டு விட்டு, 100 கிராம் குளுகோஸ் சாப்பிட வேண்டும்.
 
பின்பு ஒவ்வொரு மணி நேரம் இடைவெளி விட்டு மூன்று முறை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை அளவிடுவார்கள். கண்டுபிடிக்கப்படும் சர்க்கரையின் அளவிற்கு தக்கபடி சிகிச்சை வழங்கப்படும். சிலருக்கு பாரம்பரிய ரீதியாக சர்க்கரை நோய் இருக்கும். சிலர் முந்தைய கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
 
அதிக எடை கொண்டவர்கள், அதிக எடைகொண்ட குழந்தையை பிரசவித்தவர்கள், அடிக்கடி கர்ப்ப சிதைவுக்கு உள்ளானவர்கள் ஆகியோர் கர்ப்பமான தொடக்கத்திலே சர்க்கரை நோய் பரிசோதனைக்கு தயாராக வேண்டும். முறையான உணவு பழக்கம் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். முடியாவிட்டால், இன்சுலின் ஊசி போட வேண்டியதிருக்கும்.
 
இந்த ஊசி சிகிச்சையை தொடங்கும் சில நாட்கள் கர்ப்பிணி ஆஸ்பத்திரியில் தங்க வேண்டியதிருக்கும். அங்கு அவருக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டு, அது ரத்த சர்க்கரையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று ஆராய்வார்கள். பின்பு அவர்கள் வீடு திரும்பி, வீட்டில் இருந்தபடியே ஊசி போட்டுக் கொள்ளலாம்.
 
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவை வயிற்றில் இருக்கும் சிசுவை பாதிக்கும் என்பதால் மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை."தாயின் ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால், வயிற்றுக் குழந்தையின் உடலும் அதிக சர்க்கரையை உற்பத்தி செய்யும். அதுவே குழந்தையின் உடல் வேகமாக வளருவதற்கும், எடை அதிகரிப்பதற்கும் காரணமாகிறது.
 
நிறை மாத காலத்தில் குழந்தையின் உடலில் திடீரென்று சர்க்கரையின் அளவு குறையவும் செய்யும். அதனால் குழந்தை மரணமடையக் கூட செய்யலாம். அதனால் கர்ப்பிணிகள் சர்க்கரை நோயை மிக கவனமாக கையாள வேண்டும். கண்டறிந்து, முழுமையான சிகிச்சையும் பெற வேண்டும். பிரசவத்திற்குப் பிறகும் தாய் மற்றும் குழந்தையின் ரத்தத்தை பரிசோதித்து, சர்க்கரை இருந்தால் அதற்கு தக்கபடியான சிகிச்சையை பெறவேண்டும்..
 
இந்தியா தற்போது, `உலக சர்க்கரை நோயாளிகளின் தலைநகரம்' என்று சொல்லும் அளவிற்கு, சர்க்கரை நோயாளிகளின் நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. சர்க்கரை நோயில் ஆண், பெண் என்ற பேதமில்லை. கணவருக்கு சர்க்கரை நோய் இருந்தாலும், மனைவிக்கு இருந்தாலும் அது அவர்கள் தாம்பத்ய வாழ்க்கையையும், இனப்பெருக்க திறனையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதனால் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஓய்வு, மனமகிழ்ச்சி மூலம் சர்க்கரை நோய் வராத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும். வந்து விட்டால் அலட்சியப்படுத்தாமல் முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
 
- டாக்டர் கே.எஸ்.ஜெயராணி.

0 comments:

Post a Comment